யாதும் ஊரே திட்டத்தின் அடிப்படை கோட்பாடுகள்

 1. ’யாதும் ஊரே’ திட்டம் ஒரு கூட்டுமுயற்சி. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் பங்கெடுக்க விரும்பும் ஆர்வலர்களையும், அறிஞர்களையும் ஒன்றாக இணைக்கிற பொதுமேடையாக இத்திட்டம் இருக்கும்.
 2. தமிழகத்தை இயற்கை வளமிக்க மாநிலமாக மாற்றும் எண்ணமுள்ள அனைவரையும் இணைக்கவும், சிறப்பாக செயல்படும் அனைவருடனும் இணையவும் ‘யாதும் ஊரே’ ஓர் உறவுப்பாலமாக இருக்கும்.
 3. தமிழகம் முழுவதும், சுற்றுச்சூழல் அறிஞர்களை கொண்டு பயிற்சிகளை நடத்தி, இயற்கையை நேசிக்கும், ’பசுமை தொண்டர்களை’ உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கும்.
 4. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முனைப்பாக செயல்படும் தனி நபர்களுக்கும், அமைப்புகளுக்கும் அவர்கள் சிறப்பாக இயங்க ‘யாதும் ஊரே’ திட்டம் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்கும்.
 5. சுற்றுப்புற சூழல் மேம்பட உழைக்கும் அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும், செயல்வீரர்களையும் அடையாளப்படுத்தி கௌரவப்படுத்தும்.
 6. இயற்கையைப் போற்றும், நேசிக்கும் தலைமுறையை உருவாக்குவது.

’யாதும் ஊரே’ திட்டத்தின் இலட்சியங்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முழுமையான மாற்றம் கொண்டுவர பின்வரும் நான்குமுனை செயல்பாட்டை உறுதிபடுத்துவது அவசியமாகிறது.

நான்குமுனை செயல்பாடுகள்:

 1. சுற்றுச்சூழல் கல்வி :
  விழிப்புணர்வு இல்லாமல் மாற்றம் வராது. கல்வி இல்லாமல் விழிப்புணர்வு வராது. சுற்றுச்சூழல் கல்வியை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது இந்தப் பிரிவின் முதன்மையான நோக்கம்.
 2. மரம் நடுதலும் பராமரித்தலும் :
  பூ தரும். காய் தரும். கனி தரும்.. நிழல் தரும்.. மழைதரும் தன்னிடமுள்ள அனைத்தையும் தருகிற (NATIVE) மரங்களை, விதைத்து பராமரித்து பாதுகாப்பது இந்தப் பிரிவின் முதன்மையான நோக்கம்.
 3. நீரிலைகள் பராமரிப்பு :
  ’நீர் இன்றி அமையாது உலகு’. உயிர்கள் தழைக்க வானின் அமுதமாய் வருகிற மழைநீரை சேமிக்கும் நீர்நிலைகளைப் பராமரிப்பதும், பாதுகாப்பதும் இந்தப் பிரிவின் முதன்மையான நோக்கம்.
 4. கழிவுப்பொருள் மேலாண்மை :
  ’கழிவுப்பொருள் மேலாண்மையில் காட்டுகிற அக்கறைதான், ஒரு சமூகம் நாகரிகம் அடைந்திருக்கிறது என்பதன் அடையாளம். நம் வீட்டைப்போலவே, நாட்டையும் சுத்தமாக வைத்திருக்கும் எண்ணத்தை அனைவரிடமும் உருவாக்குவதும், கழிவுப்பொருள் மேலாண்மைக்கு வழிகாட்டுவதும் இந்தப் பிரிவின் முதன்மையான நோக்கம்.

‘யாதும் ஊரே’ - திட்டத்தின் செயல்திட்டங்கள்

 1. சுற்றுச் சூழல் கல்வி :
  1. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுற்றுச்சுழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
  2. வாழும் ஊரின் சிறப்பையும், அந்தப் பகுதி இயற்கையின் தனித்துவத்தையும் அங்குள்ள அனைவருக்கும் புரிய வைப்பது.
  3. இசை, பாடல்கள், நாடகம், இயற்கை உணரும் நடைபயணம் போன்ற உத்திகளின் மூலம் அந்தப் பகுதியின் பறவைகள், தாவரங்கள், நீர் நிலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
  4. மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஓர் அங்கமாக சுற்றுச்சூழல் கல்வியை கொண்டுவர முயற்சிகள் எடுப்பது.
  5. அனைவரும் தங்களை இயற்கையின் அங்கமாக உணர செய்வது.
 2. மரம் நடுதலும் பராமரித்தலும் :
  1. ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் மேம்பட அதன் நிலப்பரப்பில் 33% மரங்கள் இருக்க வேண்டும் என்கிறது அறிவியல். ஆனால், தமிழகத்தில் 17% மரங்களே இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த இடைவெளியை நிரப்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
  2. ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. அதன்படி அங்கு வளரவேண்டிய நமது பாரம்பரிய மரங்களை அறிஞர்களின் ஆலோசனைபடி வளர்க்கப்படும்.
  3. மரக்கன்றுகளை நடுவதுடன், அதை தொடர்ந்து பராமரிக்க தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
 3. நீர்நிலை பராமரிப்பு :
  1. நீர் பற்றாக்குறையுள்ள தமிழகத்தை, நீர் வளமிக்க மாநிலமாக மாற்ற அனைவரையும் ஒன்றிணைத்து பணியாற்றுவது.
  2. ஜீவநதிகள் இல்லா தமிழகத்தில், மழையே நீர் வள ஆதாரம். நிலத்தடி நீரின் அளவை உயர்த்துவதும், நிலப்பரப்பில் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் மூலம் மழைநீரை சேமிப்பதும் முதன்மை நோக்கமாகும்.
  3. நீர் வழித்தடங்களை சீரமைப்பது மற்றும் பராமரிப்பது.
  4. நீர்நிலைகளை ஆண்டிற்கு ஒருமுறை மக்களுடன் இணைந்து கொண்டாடுவது.
 4. கழிவுப்பொருள் மேலாண்மை :
  1. கழிவுப்பொருட்களால் சுற்றுப்புற சூழல் சீர்கேடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது.
  2. கழிவுப்பொருள் மேலாண்மையின் முக்கியத்துவத்தை விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
  3. வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குத் தேவையான கழிவுப்பொருள் மேலாண்மையை அறிஞர்களின் ஆலோசனைகள் மூலம நடைமுறைப்படுத்துவது.
  4. கழிவுப்பொருள் மேலாண்மை மூலம் வீடுகளில் தோட்டம், மாடித்தோட்டம் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்வது.
  5. கழிவுப்பொருள் மேலாண்மையை திறம்பட மேற்கொள்வதன் மூலம் நோய்களற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவது.

‘யாதும் ஊரே’ - திட்டத்தின் செயல்பாடுகள்

 1. ‘யாதும் ஊரே’ தன்னார்வலர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி பட்டறைகளை நடத்தி, இயற்கைப் பற்றிய போதுமான புரிதலை உருவாக்கி அதன் பிறகு களத்தில் இறக்குவது.
 2. பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு, முதலில் சென்னைக்கு அருகில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஏதேனும் ஒரு ஏரியை தேர்ந்தெடுத்து ‘முன்னோட்ட’ அடிப்படையில் செயல்படுத்துவது.
 3. எடுத்துக்கொண்ட நீர் நிலையை ஒட்டிய பகுதிகளில், மேற்சொன்ன இந்த நான்குமுனை செயல்பாடுகளையும், முழுமையாக ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட ஒரு பகுதியின் சுற்றுச்சூழலை முழுமையாக மாற்றிக்காட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
 4. நான்குமுனை பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆலோசனை குழுக்கள் அந்த துறைசார்ந்த அறிஞர்கள் கொண்டு அமைக்கப்படும். அவர்கள் வழிகாட்டல் படி அக்குழுக்கள் செயல்படும்.
 5. அடுத்த மழைக்காலத்திற்குள் ‘முன்னோட்ட’ அடிப்படையில் எடுத்த நீர்நிலையில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவருவது.

இயற்கையை நேசிக்கும், போற்றும் பாதுகாக்கும் ஓர்
இயக்கமாக ‘யாதும் ஊரே’ செயல்படும்.